Friday, August 31, 2018

மறக்கக் கூடாத வரலாறு, விழித்தெழ வேண்டிய தருணம் இது.


பொதுவாக நாம் வரலாற்றுப் பாடங்களில் படிக்கும் போது அசோகர், தி கிரேட் அல்லது அக்பர், தி கிரேட் என்று படித்திருப்போம். தமிழகத்தைச் சார்ந்த எந்த அரசர்களும் ஏன் அது போல அழைக்கப்படவில்லை என்ற கேள்வியை கேட்டுப் பார்த்திருக்கிறோமா. அசோகர் இந்தியவின் மிகப் பழமைவாய்ந்த பேரரசான மவுரியப் பேரரசின் மன்னர். அதேபோல அக்பரோ முகலாயப் பேரரசின் மன்னர். இந்த இரண்டு அரசுகளுக்கும் ஒரு பொது அம்சம் உள்ளதை நாம் பார்க்கலாம். இரண்டும் இந்தியாவின் மைய நிலப் பகுதிகளான சிந்து–கங்கை நதியின் சமவெளிப் பகுதியைச் சார்ந்தவை. அதேபோல தென்னிந்தியாவின் முக்கியப் பேரரசாக கருதப்படுவது விஜயநகரப் பேரரசு. அது கோதாவரி கிருஷ்ணா நதியின் சமவெளிப் பகுதியைச் சார்ந்தது. அப்படியானால் தமிழ்நாட்டில் பேரரசுகள் உருவாகவில்லையா? எந்த ஒரு சாம்ராஜ்யமோ பேரரசோ உருவாக அடிப்படை காரணங்கள் நிலவியல், பொருளியலில் தான் இருக்கிறது. நதிக்கரை தான் உலகின் பல நாகரிகத்தின் தொட்டில். இந்திய நிலப்பகுதியில் இரு நதிப்படுகைகளே பெரிய அளவில் வேளாண் தொழிலுக்கு உகந்தவை. சிந்து-–கங்கைச் சமவெளி. கோதாவரி முதல் கிருஷ்ணா வரையிலான நிலம். இப்பகுதியில்தான் மக்கள் தொகைப் பெருக்கம் நிகழ்ந்தது. ஆகவே அங்கே பெரிய படைகள் உருவாயின. பேரரசுகள் பிறந்தன. அவை மக்கள் தொகை குறைவான நாடுகளை எளிதில் வென்றன.

இரண்டாவதான பொருளியல் காரணம் முதற்காரணத்தோடு தொடர்புடையது. பேரரசுகள் வளர்வதற்கு உகந்த பொருளியல் சூழல் என்ன என்று பார்க்க வேண்டும். கங்கையும் சிந்துவும்  கிருஷ்ணாவும் கோதாவரியும் மிகப்பெரிய நதிகள். பெரிய நாவாய்கள் அவற்றில் சென்றிருக்கின்றன. அவற்றால் பெருமளவில் வாணிபம் வளர்ந்தது. பொருளியல் உபரி உருவானது. அது வலிமை வாய்ந்த பேரரசுகளை நிலைநிறுத்தியது. தமிழகத்தில் சங்க காலத்தில் இச்சிறு நிலப்பகுதிக்குள் மூன்று முதன்மை அரசர்களும் (சேர, சோழ, பாண்டியர்கள்) நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றரசர்கள் இருந்தனர். ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டிருந்ததால் மாபெரும் பேரரசுகள் உருவாகவில்லை. குட்டிக் குட்டி அரசுகளாக இருக்கையில் போர் ஓய்வதேயில்லை. இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் நாம் காவிரி டெல்டா வேளாண் பகுதியின் சூத்திரமே அமைந்துள்ளது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்கால சோழரின் ஆட்சிக் காலத்தை மட்டுமே பேரரசு என்று கூறும் தன்மை கொண்டிருந்தது. காரணம் விஜயாலயச் சோழனால் மீண்டும் உருவாக்கப்பட்டு அவன் வழி வந்த பிற்காலச் சோழர்கள்தான் சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செலுத்தினர். ராஜராஜசோழன், ராஜேந்திர சோழன் எல்லாம் விஜயாலயன் பின் வந்து சோழ தேசத்தை உச்சிக்கு கொண்டு சென்றவர்கள். ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற மாபெரும் கனவோடு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவுதான் தற்போதைய டெல்டா பகுதிகள்.

சோழர் காலத்தில்தான் தமிழகத்தில் பெரிய அளவில் பாசன வசதிகள் உருவாயின. கால்வாய்கள், குளங்கள், கிணறுகள், ஏரிகள் என்று பல வகையில் நீர் மேலாண்மைக்கான அனைத்து வசதிகளும் உருவாயின. அதன் தொடர்ச்சியாக விளைச்சல் பெருகியது, மக்கள் தொகை வளர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தொடர்ச்சியாக புதிய வேளாண் நிலங்கள் உருவாக்கப்பட்டன.  வியக்க வைக்கும் கலை வடிவங்களான தஞ்சை பெரியகோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் போன்ற பிரம்மாண்டங்களை உருவாக்க எத்தனை பேர் தேவைப்பட்டிருப்பார்கள். அதேபோல இந்தியாவில் வங்கம் வரையில் படையெடுத்து வென்று பின் கடல் கடந்து இலங்கை, மலேசியா, வியட்னாம், இந்தோனேசியா என்று தெற்காசிய நாடுகள் அனைத்திலும்  நிலைநிறுத்திய சோழர்களுக்கு எப்படிப்பட்ட படை பலம் தேவைப்பட்டிருக்கும். இவர்கள் அனைவருக்கும் முதற் அடிப்படை தேவையான உணவை தன்னிறைவு செய்ய வேண்டிய பெரும் பணி அன்றைய சூழலில் இருந்ததை நாம் யூகித்துப் பார்க்க வேண்டும்.

தமிழக வரலாற்றிலேயே மிகப் பிரம்மாண்டமான மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் சோழர்கள் காலக் கட்டத்தில்தான் செய்யப்பட்டன. தமிழ்நாட்டின் பிரம்மாண்டமான ஏரிகள் பெரும்பாலும் சோழர்களல் வெட்டப்பட்டவை. தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீரநாராயணபுரத்தில்(அன்று, இன்று காட்டுமன்னார் கோயில்) உள்ள வீராணம் ஏரி சோழர் காலத்தில், ராஜராஜனின் பாட்டனரால் வெட்டப்பட்டதுதான். இந்த ஏரி 20 கி.மீ நீளமும் 5 கீ.மீ அகலமும் கொண்டது. சிதம்பரம் காட்டுமன்னார் கோயிலிலிருந்து சென்னைக்கு அங்கிருந்து குடிநீர் அனுப்பப்படுகிறது. அது எவ்வளவு பெரிய வைப்பு நிதி என்பதை நாம் யோசிக்க வேண்டும். இன்று அதன் மதிப்பு பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு மேல்! எத்தனைக் கோடி வரிப்பணம், எவ்வளவு உழைப்பு! மதுராந்தகம் ஏரி, சுந்தர சோழப்பேர் ஏரி, குந்தவைப் பேர் ஏரி என்று இதுபோல தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏரிகள் வெட்டப்பட்டன. இந்த ஏரிகளை பராமரிக்க ஏரி வாரியம் என்ற தனி அமைப்பை உருவாக்கி நிர்வகித்தார்கள். நம்முடைய பாரம்பரியச் சொத்தே இந்த ஏரிகள்தான். இத்தனை வருடங்களாக நாம் குடிப்பது சோழன் அளித்த குடிநீரை. உண்பது அவர்கள் உருவாக்கிய விளைநிலங்களின் சோற்றை என்பதை மறந்து விடக் கூடாது.

மேலும் காவிரியின் கிளைகள் கூட சோழர் காலத்தில் கட்டியமைக்கப்பட்டவை. உய்யக்கொண்டான் வாய்க்கால், ராஜேந்திரன் வாய்க்கால், செம்பியன்மாதேவி வாய்க்கால் போன்றவை உருவாக்கப்பட்டு பெரும்பகுதி விளைநிலங்களை பாசனப் பரப்பிற்கு கொண்டு வந்தனர். ஆயிரம் வருடங்களாக தமிழ்நாட்டின் சொத்தாக இருக்கும் தஞ்சை நெல் வயல்கள் இந்தப் பெரும் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டவையே. காவிரி டெல்டாவின் நீர் மேலாண்மை என்பது சோழர்கள் தங்கள் தொலைநோக்கு பார்வையால் உருவாக்கிய மாபெரும் பொறியியல் அதிசயம். பூமியின் மேல்மட்டத்திலிருந்து சில அடி ஆழங்களில் நிலத்தடி நீரை தக்க வைத்துக் கொள்ளும் வழிமுறை.

வரலாறு காணாத அளவில் காவிரி கரைபுரண்டு ஓடும் இந்த தருணத்தில் நாம் மேற்கண்ட வரலாற்று சித்திரத்தை கண்முன் நிறுத்திப் பார்க்க வேண்டும். நீர் மேலாண்மையை சுத்தமாக கவனத்தில் கொள்ளவில்லை, தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும், நீர் கடைமடைப் பகுதிக்கு சரியாக சென்று சேரவில்லை, உபரி நீரானது கடலில்தான் கலக்க வேண்டும் இவ்வாறு பல்வேறு விவாதங்கள் தற்போது மையம் கொண்டுள்ளது. இவைகளில் பெரும்பாலும் அரசியல் பழிகளும், வெற்றுக் கூச்சல்களும் தான் அடக்கம். இவை தவிர்க்கப்பட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதே விவேகமான செயல்பாடாக அமையும். புதிய திட்டங்கள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மேற்கூறப்பட்ட நமது முன்னோர் தந்து சென்ற சொத்தை இப்போது என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு, கவனமின்மை, முறையற்ற நிர்வாகச் செயல்பாடுகள் போன்றவை தான் இவற்றுக்கு நிச்சயம் பதிலாக இருக்கும். இவற்றைச் சரி செய்வதிலிருந்து தொடங்கினாலே நிச்சயம் முன்னேற்றம் தானாகவே வரும். இல்லையெனில் நல்லதோர் வீணை செய்து அதை நலங்கெடப் புழுதியில் எறிந்த பழிக்கு ஆளாவோம் என்பதில் ஐயமில்லை. மன்னர் ஆட்சிக் காலமான சோழர்காலத்தில் வளர்ச்சித் திட்டங்களை எப்படிப்பட்ட தொலைநோக்கு பார்வையில் திறம்பட செய்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, மக்களாட்சி என்று கூறப்படும் இப்போது நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள அரசு மதுபாணக்கடைகளை (டாஸ்மாக்) மூட நீதிமன்றம் உத்தரவிட்டதும், அரசாங்கம் வருவாய் குறைந்துவிடக் கூடாது என்று சரிக்கட்ட அவசர ஏற்பாடாக ஊர்ப்புறங்களில் கடைகளைத் திறந்தது. இதுபோன்ற விஷயங்களில் காட்டும் தீவிரத்தை, வாழ்வாதார விஷயங்களான நீர், வேளாண்மை ஆகியவற்றில் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார், குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார் என்ற பழைய பாடல் வரி நாம் அறிந்தது தான். காவிரி கர்நாடகத்தில் தோன்றினாலும் அது பயணிக்கும் நீர் வழித்தடம் (நீர்பரப்பானது) தமிழ்நாட்டில்தான் அதிகம். கடந்த 100 ஆண்டுக்குள் பல அணைகளை கட்டி கர்நாடகம் தனது விவசாய பாசனப் பரப்பை பல மடங்காக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் நாடோ கடல்நீரைக் குடிநீராக மற்றி தனது நீர்த் தேவையை தன்னிறைவு செய்து கொள்கிறது. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் விழிப்புடன் செயல் வேளையில் இப்போது ஆவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கையில் இருக்கும் முன்னோர் கொடுத்த பொக்கிஷத்தைக் கோட்டை விட்ட முட்டாள்களாக வரலாற்றின் முன் நாம் நிற்போம்.

கண்ணன்.வ, திருச்சி.