Wednesday, August 15, 2018

அவர்தான் காந்தி!


1947 ஆகஸ்ட் 15, பிரட்டீஷ் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்திய விடுதலை பெற்றது. தலைநகர் டெல்லியில் மூவர்னக் கொடி ஏற்றி நாட்டின் பிரதமர் நேரு பேருரையாற்றினார். நாட்டின் சுதந்திரதின விழாவை ஒருபுறம் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மறுபுறம் மேற்கு வங்கத்தின் நவகாளி. தேசப் பிரிவினையின் போது மதக் கலவரங்களால் வன்முறையின் உச்சம் அரங்கேறிக் கொண்டிருந்த மாநிலம் மேற்கு வங்கம். இந்து முஸ்லீம் ஒருவருக்கொருவர் விலங்குகளைப் போல அடித்து செத்துக்கொண்டிருந்தனர். கொல்கத்தாவின் நவகாளியில் அன்று. கலவரக்காரர்களை சமாதானப்படுத்தி வன்முறை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாட்டின் விடுதலைப் போரட்டத்தை முன்நின்று நடத்திய பெரியவர் கூப்பியக் கரங்களோடு வருகிறார் நவகாளிக்கு. அவர் வருகையை எதிர்த்து இரு பிரிவின் வன்முறையாளர்களும் அவர் வரும் சாலையில் மக்களை கரைத்து ஊற்றியும், முட்களை போட்டும் வரவேற்றனர். ஆனால், அது பற்றி கவலைப்படாமல் தனது கைகளால் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு கலவரபூமியில் தன் காலடியை எடுத்து வைத்து சமாதான முயற்சியை தனது உண்ணாவிரதத்தின் மூலம் அந்தக் கிழவர். எந்த ஒரு நாட்டிற்கும் விடுதலைப் போரட்டத்தை தலைமை தாங்கி வழி நடத்தியவர் தான், விடுதலை பெற்ற பின் நாட்டை ஆள்வதே வழக்கம். இது வரலாற்று உண்மை. ஆனால், இந்தியாவில் ஒருபக்கம் சுதந்திரக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் நிகழ்ந்து வந்தாலும், அதில் துளியும் உடன்பாடு இல்லாமல் மறுபக்கம் மதவெறியின் கோரத்தால் வெறியாட்டம் நடத்தி வரும் தனது பிள்ளைகளை கண்டு நொந்த மனதுடன் அவர்களை நல்வழிப்படுத்த பணியாற்றினார் அந்த தேசத்தந்தை. அவர்தான் காந்தி.

நேரு, பட்டேல், ராஜாஜி போன்ற பெருந்தலைவர்கள் என்றாலும் சரி, தனது சபர்மதி ஆசிரமத்தில் ஆட்டுக்குட்டியுடன் விளையாட்டிக் கொண்டிருக்கும் சிறுமி என்றாலும் சரி, தன்னை சந்திக்கின்ற அனைவரிடமும் சமமான மதிப்பும் முக்கியத்துவமும் அளித்துப் பேசும் மனிதப் பண்பை கொண்டவர். அவர்தான் காந்தி. போராட்ட வழிமுறையில் உடன்பாடு இல்லாமல் காங்கிரசில் இருந்து வெளியேறி இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய சுபாஷ் சந்திரபோஸ், தனது ராணுவத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். அவற்றிக்கு அவர் வைத்த பெயர்கள் காந்தி பிரிகேட், சுபாஷ் பிரிகேட், நேரு பிரிகேட். அதேபோல கொள்கை ரீதியாக காந்தியுடன் முரண்பட்டு திராவிட இயக்கத்தை நிறுவிய பெரியார் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டவுடன் இந்தியாவிற்கு ‘காந்தி தேசம்என்று பெயரிட வேண்டும் என்றார். தன்னிடம் மாற்றுக் கருத்துக்கொண்டவரும் தன்னைப் போற்றும் வண்ணம் மரியாதைக்குரிய மாண்பினை உடையவராக இருந்தார். அவர்தான் காந்தி.

ஒரு முறை ஆங்கிலேயர் ஒருவர் காந்தியை சந்திக்க வந்தார். தன் கையில் வைத்திருந்த பேப்பர்களை கொடுத்து அவரை படிக்கச் சொன்னார். அதில் அவர் காந்தியை கடுமையாக திட்டி விமர்சித்து பல பக்கத்திற்கு நீண்டக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதை அமைதியாகப் படித்துவிட்டு காந்தி அந்த தாள்களை பினைத்திருந்த குண்டுசியை மட்டும் தனியாக எடுத்து தனது மேஜை மேல் வைத்துக் கொண்டார். பின்னர் அந்த பேப்பர்களை அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டார். அதிர்ச்சியில் அந்த ஆங்கிலேயர் காந்தியிடம் என்ன செய்கிறீர்கள் என்றார் பதட்டத்துடன். காந்தி அவரிடம் பொறுமையுடன் “நீங்கள் என்னிடம் கொடுத்ததில் எனக்கு உபயோகமானதை எடுத்து வைத்துக் கொண்டேன். தேவையற்றதை அது சேர வேண்டிய இடத்தில் சேர்த்துவிட்டேன்” என்றர். தன் மீதான விமர்சனத்தைக் கூட பொறுமையுடன் அதே வேலையில் பக்குவத்துடன் எதிர்கொள்கின்ற பக்குவம் கொண்டவர்.அவர்தான் காந்தி.

சுட்டுக் கொல்லப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு டில்லி பிர்லா மந்திரில் தங்கியிருந்த காந்தியை பார்க்க காலவரத்தில் பாதிக்கப்பட்ட பலரும் வந்திருந்தனர். அப்போது ஒரு முதியவர் காந்தியைப் பார்த்து ஆவேசமாக “உங்களால் தான் இத்தனைப் பிரச்சனையும், ஏன் இன்னும் இங்கே இருந்து கொண்டு நீங்களும் துன்பப்பட்டு எங்களையும் துன்பப்படுத்துகிறீர்கள், எங்கேயாவது போய் தொலைந்துவிட வேண்டியது தானே” என்றார். அவரிடம் காந்தி “நான் எங்கே போக வேண்டும் என்று சொல்கிறீர்கள்” எனக் கேட்டார். அந்தப் பெரியவர் ஆத்திரத்துடன் ‘வயதான காலத்தில் உங்களைப் போன்ற சன்யாசிகள் மாதிரி இமயமலை சென்று இறைவனை தேட வேண்டியது தானேஎன்றார். அவரிடம் சாந்தத்துடன் காந்தி ‘எனக்கு இதுதான் இமயமலை, உங்களுக்கான சேவைதான் எனது இறைப்பணி. இதைத்தாண்டி நான் செய்வதற்கு வேறு பணியில்லைஎன்று சொல்லி நகர்ந்தார். மகாத்மா என்று ஒருபோதும் தன்னைக் கருதாமல், மனித குலத்துக்கு சேவையாற்ற வந்த சாதாரண சேவகனாகவே ஒவ்வொரு கணமும் நினைத்தும் வாழ்ந்தும் வந்தவர். அவர்தான் காந்தி.

கண்ணன்.வ, திருச்சி.

No comments:

Post a Comment