Sunday, August 19, 2018

கட்சிக் கூட்டம் போல் நடைப்பெற்ற கருத்தரங்கு கூட்டம்


கட்சிக் கூட்டம் போல் நடைப்பெற்ற கருத்தரங்கு கூட்டம்...தனித்து ஒலித்த ஒற்றைக் குரலுக்கும் எதிர்ப்பலை!
திருச்சியில் கலைஞர் அறிவாலையத்தில் ஊடகவியலாளர் தலைமையில் கருத்துரிமையை மீட்டக் கலைஞர் என்ற தலைப்பில் நடைப்பெற்ற கருத்தரங்கோ கட்சிக் கூட்டம் போலவே இருந்தது. காரணம் பல்வேறு ஊடகங்களில் இருந்து வந்த ஊடகவியலாளர்கள் அனைவரும் ஜெயலலிதாவை ஜெயலலிதா என்றே பெயர் சொல்லி அழைக்க தெரிந்த போது கருணாநிதியை கலைஞர் என்றே அனைவரும் குறிப்பிட்டனர், தமிழ் இந்து சமஸ்ஸை தவிர. அவர் பெயர் சொல்லி பேச ஆரம்பித்த உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்திற்கு வந்தவர்கள் “கலைஞர்னு சொல்லுடா உன் வயசு என்ன அவர் வயசு என்ன” என்று கூச்சலிட்டு கத்த, பின்னர் சமாதானம் செய்யப்பட்டு பேச்சு தொடர்ந்தது. இதில் என்ன நகைமுரன் என்றால் கருணாநிதிக்கு தேசிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை, அவர் தேசிய அளவில் மறைக்கப்பட்ட அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட தலைவர் என்ற கருதுகோளில் ‘தெற்கில் இருந்து ஒரு சூரியன் “ என்ற தலைப்பில் தொடர்கட்டுரை எழுதி அது புத்தகமாக வந்துள்ளது. நடைப்பெற்ற கருத்தரங்கு கூட்டத்திலும் அது விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. கருந்தரங்கில் சமஸ் பேசிய மையக்கருவும் அதுவே. சொல்லப்போனால் அனைத்துப் பத்திரிகைகளை விடவும் தமிழ் இந்து தான் கருணாநிதியின் மறைவுக்கு சிறப்பாக புகழ் வணக்கம் செலுத்தியது என்று கூறலாம். நடுப்பக்க கட்டுரைகள் என்று இல்லாமல் அந்த வாரம் வெளியான சப்ளிமன்ட் பேப்பர் முதற்கொண்டு அனைத்திலும் கருணாநிதி குறித்த சிறப்பு செய்திகளும் கட்டுரைகளையும் வெளியிட்டனர். ஆனால் அவரை பெயர் சொல்லி அழைத்த ஒரே காரணத்திற்காக அவர் மட்டும் கூட்டத்தில் தனித்து விடப்பட்டார். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் சமஸ்சுக்கு பின் பேச வந்த ஊடகவியலாளர்கள் சமஸ்சின் நிலைப்பாடை குறித்து விளக்கி அவருக்கு தார்மீக ஆதரவை அளிக்காமல் போனது தான். இந்து ராம் கூட மோடி, டிரம்ப்பை எல்லாம் பெயர் சொல்லி தான் அழைப்பார்கள் என்றாலும் சபையில் பிறர் மனம் புன்படத வண்ணம் பேசலாமே என்று பூடகமாக சமஸ்சுக்கு ஆலோசனை தான் வழங்கினார். மற்ற அனைவரும் மேடையில் அலங்கார பேச்சாக பேசி நல்ல பிள்ளைகளாக காட்டிக்கொண்டனர். ஆனால் சமஸ்ஸோ கருணாநிதியை கருத்தியல் ரீதியாக இந்தியாவின் தேசிய தலைவராக முன்னிறுத்த போராளியாக தொடர்ந்து எழுதியும் பேசியும் ஆத்மார்தமாக செயல்பட்டு பெயர் சொல்லிவிட்டான் என்று பேசு பொருளாகிவிட்டார். இது தான் மீட்டெடுத்த கருத்துரிமையோ!  எப்போது நமக்கு கேரள அரசியல் கலாச்சரம் குறித்தெல்லாம் தெரிய வருமோ, என்று மாத்ருபூமி வாசுதேவநாயர் எல்லாம் இங்கே உருவாகும் காலம் வருமோ.!


கண்ணன்.வ
திருச்சி.

No comments:

Post a Comment