Sunday, November 18, 2018

மக்களாட்சியின் தத்துவம் மலர்ந்த கதை

உலகின் பல நாடுகளில் ஜனநாயக ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு அடிப்படை தத்துவமான மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கும் மக்களாட்சிக்கான வரையறையாக கருதப்படும் விளக்கம் சுமார் 155 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 19, 1863ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அந்நாட்டின் ‘கெட்டிஸ்பர்க்’ நகரில் நிகழ்த்திய உரை மூலம் வலியுறுத்தப்பட்டது.

உரையின் பின்னணி:

கருப்பின மக்களுக்கான நீதியை மீட்டெடுத்து அடிமை முறையை ஒழித்து, அமெரிக்க அதிபர்களுக்கு மட்டும் அல்லாமல் உலகுக்கே ஆதர்ஷமாக விளங்குபவர் லிங்கன். சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து வாழ்வில் சோதனைகளையும் துயரங்களையும் மனம் தளராமல் கடந்த உலகின் பழமை வாய்ந்த ஜனநாயக நாட்டின் அதிபராக உச்சம் தொட்டவர் ஆபிரகாம் லிங்கன்.

அமெரிக்காவின் 16வது அதிபராக லிங்கன் பதவி வகித்த காலத்தில்தான் அங்கு, கருப்பின மக்கள் அடிமை முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்நாட்டுப் போரில் ஈடுபடத் தொடங்கினர். 4 ஆண்டுகளுக்கு மேல் நடந்த போரில் தன் மகன், உறவினர்கள், நண்பர்கள் என பலரையும் இழந்தபோதும் சளைக்காமல் உழைத்து உள்நாட்டு போருக்குதீர்வு கண்டார் லிங்கன்.

அது மட்டுமின்றி, அமெரிக்க பார்லிமென்ட்டில் 13 வது சட்ட திருத்தத்தின் மூலம் கருப்பின மக்களின் அடிமை நிலையை ஒழித்து புதிய சகாப்தத்தை தொடங்கியவர் லிங்கன். இந்த போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நினைவு நிகழ்சி கெட்டிஸ்பர்க் நகரில் நடந்தத. அந்த நிகழ்ச்சியில் தான் உலகப்புகழ் பெற்ற அவரது உரையும் மக்களாட்சியின் தத்துவமாக கருதப்படும் சொற்களும் மலர்ந்தது.

பென்னிஸ்லாவியா மாகாணத்தில் உள்ள கெட்டிஸ்பெர்க் நகரில், உள்நாட்டுப் போரில் உயிரிழந்த 46 ஆயிரம் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டது. தலைசிறந்த பேச்சாளரும் பார்லிமென்ட் உறுப்பினருமான எட்வார்ட் எவரட் கூட்டத்தின் முக்கிய உரையை மேற்கொள்பவராக இருந்தார். சுமார் 2 மணிநேரம் எட்வரட் எவரட் உரையாற்றினார்.

அவரது நீண்ட... உரைக்குப் பின், அதிபர் லிங்கன்சில நிமிடங்களில் வெறும் 273 வார்த்தைகளைக் கொண்ட சிறு உரையை அளித்தார். அந்த உரை உலகில் ஆற்றப்பட்ட தலைசிறந்த உரைகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையின் சாரம் " 87 ஆண்டுகளுக்கு முன் நமது முன்னோர்கள் சுதந்திரத்தை அடிப்படையாக கொண்ட புதிய தேசத்தை கண்டெடுத்தனர். அனைத்து மக்களின் சமத்துவத்தின் லட்சியத்தை கனவாக கொண்டே இந்த தேசமானது உருவாக்கப்பட்டது. மக்களுக்காக மக்களால் மக்களே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மக்களாட்சியானது, இறைவனின் திருடியின் கீழ் என்றும் அழியாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும்."
மக்களாட்சி குறித்து மேலே கூறப்பட்ட இறுதி வாசகங்களே பின்னர் ஜனநாயகத்தின் எழுதப்படாத விதியாகவும் விளக்கமாகவும் உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மகத்துவம் வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த சொற்கள் உதித்த தினம் நவம்பர் 19, 1863. அதன் இன்றைய வயது 155 ஆண்டுகள்!.

புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டிவன் ஸ்பீல்பர்க் இந்த உள்நாட்டுப் போரையும், 13வது சட்டதிருத்தத்தையும் எப்படி சாதுர்யமாக கையாண்டார் என்பதை "Lincoln" என்ற திரைப்படமாக எடுத்தார். அது சிறந்த நடிகர் உட்பட பல்வேறு ஆஸ்கார் விருதுகளையும், சர்வதேச விருதகளையும் வாங்கிக் குவித்தது.

வ.கண்ணன், திருச்சி.

Monday, November 12, 2018

சர்வதேச விருது பெற்ற குறும்படம், குழந்தைகள் தினமான நாளை ரிலீஸ்

நோபல் நாயகனான கைலாஷ் சத்தியார்த்தியின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவருடைய சேவை குறித்து சர்வதேச விருது 
பெற்ற குறும்படமான ‘The Price of Free’ குழந்தைகள் தினமான 14ம் தேதி (நாளை) உலகெங்கும் திரையிடப்படவுள்ளது. 

1979ம் ஆண்டு அல்பேனியா நாட்டில் பிறந்து இந்திய மக்களுக்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து சேவை என்ற சொல்லுக்கு மறுபெயராக திகழ்ந்த அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சரியாக 35 ஆண்டுகளுக்கு பின்னர் 2014ம் ஆண்டு இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசானது அதே அமைதிக்காக கொடுக்கப்பட்டது. யார் அவர் என்று ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்த்தது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக 38 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் கைலாஷ் சத்தியார்த்திதான் அவர். உலகலாவிய அங்கீகாரம் கிடைத்த பின்னர் தான் இந்தியாவில் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்து வருகிறார் என்று அனைவரின் பார்வையும் அவர் மீது விழுந்தது. தனது ‘பச்பன் பசாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பின் மூலம் 1980ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து 103 நாடுகளில் 80 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு பிரச்சார நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐநாவின் யுனஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ துாதுவராக உள்ள சத்தியார்த்தி பாரத யாத்திரை என்ற தலைப்பில் குழந்தை பாதுகாப்பிற்காக 2017ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கி 35 நாட்களில் சுமார் 19 ஆயிரம் கிலோமீட்டர் துாரம் பயணம் செய்தார் சத்தியார்த்தி.

100 மில்லியன் பிரச்சாரம்:

உலகெங்கும் உள்ள குழந்தைகளின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் கல்விக்காக எடுக்கப்பட்ட முயற்சியே 100 மில்லியன் பிரச்சாரம். வரும் நவம்பர் 12 முதல் 18ம் தேதி வரை உலக செயல்பாட்டு வாரமாக அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டு உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதே இந்த 100 மில்லியன் பிரச்சார முயற்சி. 

பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றனர். தனது தீவிர செயல்பட்டின் காரணமாக குழந்தைகளால் போற்றப்படும் கைலாஷ் சத்தியார்த்தியின் சர்வதேச விருதுபெற்ற வாழ்க்கை குறும்படம் குழந்தைகள் தினமான 14ம் தேதி (நாளை) உலகெங்கும் திரையிடப்படுகிறது. இளம் செயல்பாட்டாளராக வாழ்க்கையை தொடங்கிய சத்தியார்த்தி, இந்தியாவில் குழந்தைகளை அடிமைப்படுத்தி கட்டாயமாக வேலைக்கு உட்படுத்திய பலரிடம் போராடி எப்படி சிறார்களை மீட்டெடுத்தார் என்பதை சித்தரிக்கிறது இந்த குறும்படம். ஆங்கிலம் தொடங்கி 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாக யுடியூப் இணையதளத்தில் வெளியாகிறது ‘The Price of Free’. இந்த சர்வதேச திரையிடலில் பங்குபெற விரும்புபவர்கள் http://actionweek.100million.org/en/2018/take-part என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

சத்தியார்த்தி பெற்ற முக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:(நோபல் தவிர)

*அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.யின் மனிநேய விருது.
* இத்தாலிய செனட் சபையின் தங்கப்பதக்கம்.
*நெதர்லாந்து நாட்டின் தங்கக்கொடி விருது.
*ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதிக்கான விருது.
*பாட்டியூன் நாளிதழின் உலகின் தலைசிறந்த ஆளுமை விருது.

வ.கண்ணன், திருச்சி. 

Saturday, November 10, 2018

செய்தித்துறையிலும் எந்திரன்!


உலகின் முதல் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் தொழில்நுட்ப செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ளது சீனா. சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ஜின்ஹூவா நியூஸ் நிறுவனம் சீனாவின் தேடல் இணைதளமான Sogou.com உடன் இனைந்து இதை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் கணிணி ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஆண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளது இந்தக் கணினி.

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பின்னணி:

நம் அனைவருக்கும் எந்திரன் படம் பார்த்திருப்போம். அதில் வரும் சிட்டி ரோபோ தான் ஆர்டிபிசியல் இன்டலிஜென்சுக்கு எளிமையான உதாரணம். அதாவது மனிதனைப் போலவே செயல்படும் இயந்திரக் கணிணி தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்சின் அடிப்படை கூறு. ஒரு பணியை செய்ய மனிதனுக்குத் தேவைப்படுகிற நுண்ணறிவு திறனை செயற்கையாக உருவாக்குவது. இயந்திரத்திற்கு மனிதர்களைப் போல பார்க்கும், சிந்திக்கும், பேசும், முடிவெடுக்கும் திறன்களை தருவதே ஏஐ என்ற ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மனிதனுக்கு நிகரான புத்தியுள்ள, அறிவார்ந்த கணினி இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்பதே அறிவியலும் பொறியியலும் இனைந்த இந்த துறையின் நோக்கமாகும். சமீப காலமாக மிகப்பெரும் பாய்ச்சலை மேற்கொண்டு வரும் இந்த துறை தற்போது செய்தித் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது.

முதல் ஏஐ செய்தியாளரின் அம்சங்கள்:

கிழக்கு சீனாவின் ஜீஜியாங் மாகானத்தில் நடந்து வரும் 5 வது உலக இணையதள கருத்தரங்கில் இந்த முதல் ஏஐ செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். ஆண் குரலில் மனிதனுக்குரிய முக பாவனைகளுடன் உண்மை மனிதனை போலவே இந்த செய்தி வாசிக்கும் எந்திரன் செயல்படுகிறார். நேரலை நிகழ்வுகளை ஔிபரப்பில் பார்த்து செய்திகளை தானக வாசிக்கிறார் இந்த எந்திரன். புதிய வரவான எந்திரன் எங்கள் ரிப்போர்டிங் டீமின் உறுப்பிராகிவிட்டார். 365 நாட்களும் 24 மனிநேரமும் செயல்படுகின்ற செய்தியாளர் கிடைத்து விட்டதாக ஜின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது

தொழில் நுட்பங்கள் மனிதனின் கடினமான செயல்களை எளிமையாக்கவே உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், அவற்றின் எதிர்வினைகளாக பல வம்புகளும் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் போலி செய்திகள் அதிகமாக பரவி வருவது தற்காலத்தில் சர்ச்சைக் குரிய பிரச்சனையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது சீனாவில் முதல் செய்தி எந்திரனாக ஒருவர் உதித்துள்ளார். உடனுக்குடன் உண்மைச் செய்திகளை உலகிற்கு உரைப்போம் என்று தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் நாள்தோறும் கூறிவரும் காலத்தில், தற்போது செய்தி வாசிப்பாளரே செயற்கையாக வந்துள்ளார் விந்தை உலகத்தில்.

வ.கண்ணன், திருச்சி.