Monday, November 12, 2018

சர்வதேச விருது பெற்ற குறும்படம், குழந்தைகள் தினமான நாளை ரிலீஸ்

நோபல் நாயகனான கைலாஷ் சத்தியார்த்தியின் பெருமையை பறைசாற்றும் வகையில் அவருடைய சேவை குறித்து சர்வதேச விருது 
பெற்ற குறும்படமான ‘The Price of Free’ குழந்தைகள் தினமான 14ம் தேதி (நாளை) உலகெங்கும் திரையிடப்படவுள்ளது. 

1979ம் ஆண்டு அல்பேனியா நாட்டில் பிறந்து இந்திய மக்களுக்காகவே வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து சேவை என்ற சொல்லுக்கு மறுபெயராக திகழ்ந்த அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. சரியாக 35 ஆண்டுகளுக்கு பின்னர் 2014ம் ஆண்டு இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசானது அதே அமைதிக்காக கொடுக்கப்பட்டது. யார் அவர் என்று ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்த்தது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக 38 ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வரும் கைலாஷ் சத்தியார்த்திதான் அவர். உலகலாவிய அங்கீகாரம் கிடைத்த பின்னர் தான் இந்தியாவில் இப்படி ஒரு மனிதர் வாழ்ந்து வருகிறார் என்று அனைவரின் பார்வையும் அவர் மீது விழுந்தது. தனது ‘பச்பன் பசாவோ ஆந்தோலன்’ என்ற அமைப்பின் மூலம் 1980ம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமார் 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வன்முறைக்கு உள்ளான குழந்தைகளை மீட்டெடுத்துள்ளார். குழந்தை தொழிலாளர் முறையை எதிர்த்து 103 நாடுகளில் 80 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கு பிரச்சார நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐநாவின் யுனஸ்கோ அமைப்பின் அதிகாரப்பூர்வ துாதுவராக உள்ள சத்தியார்த்தி பாரத யாத்திரை என்ற தலைப்பில் குழந்தை பாதுகாப்பிற்காக 2017ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து பயணத்தை தொடங்கி 35 நாட்களில் சுமார் 19 ஆயிரம் கிலோமீட்டர் துாரம் பயணம் செய்தார் சத்தியார்த்தி.

100 மில்லியன் பிரச்சாரம்:

உலகெங்கும் உள்ள குழந்தைகளின் சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் கல்விக்காக எடுக்கப்பட்ட முயற்சியே 100 மில்லியன் பிரச்சாரம். வரும் நவம்பர் 12 முதல் 18ம் தேதி வரை உலக செயல்பாட்டு வாரமாக அறிவிக்கப்பட்டு லட்சக்கணக்கான இளைஞர்களை கொண்டு உலகெங்கிலும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதே இந்த 100 மில்லியன் பிரச்சார முயற்சி. 

பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வியாளர்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்கின்றனர். தனது தீவிர செயல்பட்டின் காரணமாக குழந்தைகளால் போற்றப்படும் கைலாஷ் சத்தியார்த்தியின் சர்வதேச விருதுபெற்ற வாழ்க்கை குறும்படம் குழந்தைகள் தினமான 14ம் தேதி (நாளை) உலகெங்கும் திரையிடப்படுகிறது. இளம் செயல்பாட்டாளராக வாழ்க்கையை தொடங்கிய சத்தியார்த்தி, இந்தியாவில் குழந்தைகளை அடிமைப்படுத்தி கட்டாயமாக வேலைக்கு உட்படுத்திய பலரிடம் போராடி எப்படி சிறார்களை மீட்டெடுத்தார் என்பதை சித்தரிக்கிறது இந்த குறும்படம். ஆங்கிலம் தொடங்கி 14 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இலவசமாக யுடியூப் இணையதளத்தில் வெளியாகிறது ‘The Price of Free’. இந்த சர்வதேச திரையிடலில் பங்குபெற விரும்புபவர்கள் http://actionweek.100million.org/en/2018/take-part என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

சத்தியார்த்தி பெற்ற முக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:(நோபல் தவிர)

*அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.யின் மனிநேய விருது.
* இத்தாலிய செனட் சபையின் தங்கப்பதக்கம்.
*நெதர்லாந்து நாட்டின் தங்கக்கொடி விருது.
*ஜெர்மனி நாட்டின் சர்வதேச அமைதிக்கான விருது.
*பாட்டியூன் நாளிதழின் உலகின் தலைசிறந்த ஆளுமை விருது.

வ.கண்ணன், திருச்சி. 

1 comment:

  1. Superb.. most of our nobel laureates were identified and recognized by foreigners.. and we celebrate them after being honoured by others..

    ReplyDelete