Sunday, December 9, 2018

விப்ரோ அசிம் பிரேம்ஜிக்கு செவாலியே விருது

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜிக்கு பிரான்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனத்தை உருவாக்கியவர் அசிம் பிரேம்ஜி. தகவல் தொழில்நுட்பத் துறையில் அவர் இந்தியாவுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. தன்னுடைய அசிம் பிரேம்ஜி பவுன்டோஷன் தொண்டு நிறுனத்தின் மூலம் செய்த சேவைகளுக்காக இந்த விருது அளிக்கப்படுவதாக பிரான்ஸ் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விருது அறிமுகம்:
செவாலியே விருது 1802ம் ஆண்டு பிரன்ஸ் நாட்டின் அரசனாக இருந்த நெப்போலியன் போனபார்ட் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவில் மற்றும் ராணுவத்தில் சிறப்பாக சேவையாற்றிவர்களுக்காக வழங்கப்படும் இந்த விருதை பின்னர் பிரெஞ்சு அரசு சர்வதேச விருதாக மாற்றியது. உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த பங்களிப்பை நிகழ்த்திக் காட்டியவர்களுக்கு இந்த விருதானது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு 1995ம் ஆண்டு இந்த விருது வழங்கப்பட்ட பின்னரே செவாலியே என்ற பெயர் தமிழகத்தில் பரிச்சயமானது. டாடா நிறுவனத்தின் ஜேஆர்டி டாடா, விஞ்ஞானி சிஎன்ஆர் ராவ், பாடகி லதா மங்கேஷ்கர், இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர் போன்றவர்கள் இதுவரை இந்த உயரிய விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அசிம் பிரேம்ஜியின் சேவை:
தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்கியது மட்டும் இல்லாமல் தனது சேவை நடவடிக்கைகளாலும் பெரிதும் பேசப்படுபவர் அசிம் பிரேம்ஜி. அசிம் பிரேம்ஜி பவுன்டேஷன் என்ற சேவை நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளுக்கு மாநில அரசுகளின் துணையுடன் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். 2010ம் ஆண்டு தி கிவிங் பிலேட்ஜ் என்ற சர்வதேச சேவை அமைப்பு அமெரிக்க தொழிலதிபர்கள் பில் கேட்ஸ் மற்றும் வாரன் பப்பெட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. உலகின் பெரிய பணக்காரர்கள் சேவையில் ஈடுபட கூட்டு முயற்சியாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பில் 5வது ஆளாக 2012ம் ஆண்டு சேர்ந்தவர் அசிம் பிரேம்ஜி. தனது வருமனத்தில் 50 சதவீதத்தை சேவைக்காக அளிப்பதாக உறுதியளித்தார் பிரேம்ஜி. இதுவரை தனது சொத்து மதிப்பில் சுமார் 63 சதவீத தொகையை சேவைக்காக அளித்துள்ளார் பிரேம்ஜி.

விருது குறித்து அசிம் பிரேம்ஜி கூறுகையில், ‘பிரான்ஸ் நாட்டின் இந்த உயரிய கவுரவம் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பிரான்ஸ் நாடு தனது ஜனநாயக வலிமையின் மூலம் உலகுக்கே உந்துசக்தியாக இருக்கிறது’ என்றார்.  

1 comment:

  1. Yes.. HIS FOUNDATION DONATED MANY INTERACTIVE ANIMATED CDs WHICH WERE DISTRIBUTED BY OUR DEPARTMENT TO GOVERNMENT SCHOOLS.. REALLY USEFUL

    ReplyDelete