Monday, July 16, 2018

புரையோடி போன உயர்கல்விக்கு உடனடி அறுவை சிகிச்சை தேவை


சிறப்பு நேர்கானல்
டாக்டர்கே.பாண்டியன்- பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னால் மாநிலத் தலைவர்.

உயர்கல்வியின் தற்போதைய நிலையானது நோய் முற்றிப் புரையோடி போய்விட்டது. இப்போதைய தேவை சிறு மாற்றங்களோ சீர்திருத்தங்களோ இல்லை, உடனடி அறுவை சிகிச்சை தான் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னால் மாநிலத் தலைவர் டாக்டர் கே.பாண்டியன் கூறுகிறார்.

உயர்கல்வியின் தற்போதைய நிலை குறித்து அவரிடம் விரிவாக கேட்டறிந்த போது அவர் பல்வேறு விவரங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

பெரும் மாற்றத்தின் பின்னணி:

தமிழ்நாட்டின் உயர்கல்வியில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்த காலம் என்றால் 1980களை குறிப்பிடலாம். அதற்கு முன்பெல்லாம் கல்லுாரி ஆசிரியர்களின் நிலையானது பெரும் அவலத்திற்கு உரியதாக இருந்தது. கல்லுாரி ஆசிரியர்களுக்கு கடனோ, பெண்ணோ கொடுக்கக் கூட யாரும் முன்வர மாட்டார்கள். அப்போது அரசு கல்லுாரிகள் மற்றும் அரசு உதவிபெறும் (Govt. Aided) கல்லுாரிகள் மட்டுமே இருந்தன. அவற்றிக்கு அரசாங்கம் மிக சிறு தொகையை மட்டுமே தொகுப்பு நிதி என்ற பெயரில் வழங்கி வந்தது. அதிலிருந்தே ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தனர். அந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்த சிரமப்படும் சூழலில் இருந்த கல்லுாரி ஆசிரியர்களுக்கு 1978ம் ஆண்டு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

அதுவரை நடைமுறையில் இருந்த கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது தமிழக அரசு. அப்போதெல்லாம் 11ம் வகுப்பிற்கு பின்னர் பிரி யுனிவர்சிட்டி கோர்ஸ் (பி.யு.சி) படிக்க வேண்டும். அதன் பிறகே மூன்றாண்டு கல்லுாரி படிப்பு என்ற முறை இருந்தது. 1968ல் கோத்தாரி கமிஷன் கொடுத்த பரிந்துரையின் படி பி.யு.சி முறையில் மாற்றம் கொண்டு வந்து 12ம் வகுப்பு முறையை முதன்முதலாக 1978ம் ஆண்டு அறிமுகம் செய்தது தமிழக அரசு. ஏற்கனவே மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த அரசு உதவிபெறும் கல்லுாரிகளின் ஆசிரியர்களுக்கு பியுசி முறையை முடிவுக்கு கொண்டு வந்ததால் இருக்கின்ற வேலையையும் இழக்கும் அபாயம் எற்பட்டது. கொதித்தெழுந்த கல்லுாரி ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய மாபெரும் போரட்டத்தை முன்னெடுத்தனர். பெரிய அளவில் ஆசிரியர்கள் முன்னின்று நடத்திய முதல் போராட்டம் அதுதான். போராட்டம் உச்சத்தை அடைந்ததும் அரசு (அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்) தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 27.02.1979 அன்று அரசாணை ஒன்றை பிறப்பித்தார். அதன்படி அனைத்து கல்லுாரி ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்கும் என்றது அரசு. மேலும் தொகுப்பு நிதிக்கு பதிலாக சம்பள நிதி என்று மாற்றி அமைத்து சம்பளத்தை ஆசிரியர் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக அளிக்க உத்தரவிட்டது.

1960 மற்றும் 70களில் சீன பாகிஸ்தான் போர், வறட்சி, பஞ்சம், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவற்றின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை மத்திய மாநில அரசுகள் சந்தித்து வந்தன. 1980க்கு பின்னர் உச்சத்தை அடைந்த அந்த பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அரசு தன் கொள்கை முடிவுகளில் மாற்றம் செய்ய வேண்டிய நிலைமை வந்தபோது கல்வியில்தான் அது முதலில் கை வைத்தது. 1980க்கு பின்னர் அரசு கல்விக்கான நிதிகளை வெகுவாக குறைக்க ஆரம்பித்தது. தன்னால் மட்டுமே கல்வித் துறையை சமாளித்து மாளாது என்று முடிவெடுத்து தனியார்களிடம் கல்வியை தாரை வார்க்கத் தொடங்கியது. 1984ம் ஆண்டிலிருந்து அரசு உதவிபெறும் (Govt.Aided) கல்லுாரிகளை துவங்குவதில்லை என்ற முடிவுக்கு வந்தது. அப்போதுதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக தனியார் சுயநிதி கல்லுாரிகள் தொடங்கப்பட்டது. தற்போது காளான்கள் போல முளைத்து நிற்கின்ற ஆயிரக்கணக்கான தனியார் கல்லுாரிகளுக்கான தொடக்கப்புள்ளி அதுவே.

அப்போது வரை கல்வியானது தெய்வத்திற்கு சமானமான புனிதம் நிறைந்ததாக கருதப்பட்டது. குறிப்பாக ஆசிரியர்கள் பணத்திற்காக மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதே, கல்விக் கடவுளான சரஸ்வதியை விற்கின்ற பாவத்தை செய்வதாக கருதிய காலம் அது. அரசின் கொள்கை முடிவுகளில் சொல்லப் போனால் தேர்தல் அறிக்கைகளில் கூட கல்விதான் பிரதான முக்கியத்துவம் பெற்றுவந்தது. கல்வியை அளிக்க வேண்டியது அரசின் கடமை, அதை பெறுவது மக்களின் உரிமை என்று இருந்து வந்த நிலையில் பொருளாதார நெருக்கடியால் தவித்து வந்த அரசாங்கங்கள் கல்வியை கைகழுவத் தொடங்கின. மெதுவாக தன் பொறுப்புகளில் இருந்து விலகி கல்வியை தனியார் வசம் தள்ள ஆரம்பித்தது. புதிதாக அரசுக் கல்லுாரிகளை துவங்குவதை பெரும்பாலும் தவிர்த்துக் கொள்வது என்பது அரசின் எழுதப்படாத கொள்கை முடிவாக மாறத் தொடங்கியது. மெல்ல மெல்ல தனியார் கல்லுாரிகள் வளர்ந்து வந்து தற்போது தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1200க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதிக் கல்லுாரிகள் உள்ளன.”

மாற்றத்தின் விபரீத விளைவுகள்:

அரசாங்கத்தால் கல்வியை சரிவர நிர்வகிக்க முடியாது என்ற காரணத்தால் தானே தனியாரிடம் அதை தந்தோம். ஆனால் தற்போது அதனுடைய விளைவானது ஆபத்தானதாக அல்லவா ஆகிவிட்டது. வணிக கண்ணோட்டத்தில் மட்டுமே செயல்பட்டு வரும் அவர்களின் பிடியி்ல் இருக்கும் கல்வியின் தரத்தையும், ஒழுங்கையும் கண்கானிக்க அரசு கவனம் செலுத்தவில்லை. எப்படியோ போகட்டும் நமக்கு தொல்லை இல்லமால் இருந்தால் போதும் என்ற எண்ணத்திலேயே அதன் பின்னர் வந்த அனைத்து அரசுகளும் இன்று வரை செயல்பட்டு வருகின்றன.”

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது கல்வித் தரமானது பின்தங்கி உள்ளது, உலகின் தலைசிறந்த கல்லுாரிகளின் பட்டியலில் முதல் 250 இடங்களில் ஒரு இந்தியக் கல்லுாரி கூட இடம்பெறவில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றதே என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது:
உலக அளவிலான தர மதிப்பீடு எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், மத்திய அரசின் நேரடி கவனத்தில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்லுாரிகளான ..டிக்கு மட்டுமே வருடத்திற்கு 1500 கோடிகளுக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் அரசின் நிதி கொண்டு அங்கு படித்தவர்களோ அதீத சம்பளத்துடன் வெளிநாடுகளுக்கு சேவை செய்யப் போய்விடுகின்றனர். மருத்துவ மாணவர்களுக்கு மட்டும் 2 வருட கட்டாய கிராமப்புற சேவையை கட்டாயமாக வைத்துள்ள அரசு இவர்களை ஏன் கேள்வி கேட்கவில்லை.

ஏதோ உயிர் பிரச்சனை என்பதால் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் படிப்புக்கு மட்டும் ஓரளவு கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் பின்பற்றி வரப்படுகிறது. மற்றபடி வேறு படிப்புகள் அனைத்திற்கும் பணம் இருந்தால் போதும் முதலீடு செய்து கல்லுாரி தொடங்கிவிடலாம் என்ற நிலையில், இவர்களிடம் தரத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். முதலீடு செய்து வியாபார நோக்கில் கல்வியை நடத்தி வருகின்ற வணிகர்கள் லாப நோக்கத்தில் இல்லாமல் சேவையாக எப்படி கல்வி அளிப்பார்கள். பொருளாதார நெருக்கடியால் அரசாங்கத்தினால் கல்வியை தரமுடியாமல் தவித்த சூழ்நிலையில் அதற்கு மாற்றாக உருவெடுத்து தற்போது புதர்களாக எங்கும் பரவிக் கிடக்கும் தனியார் கல்லுாரிகள் தங்கள் வேலையை சரியாக செய்கின்றனவா என்று கண்டுகொள்ள யாரும் தயாராக இல்லை. குறிப்பாக எந்த அரசாங்கங்களாக இருந்தாலும் நமக்கு எதற்கு சிக்கல், தேவை இல்லாமல் தலைவலியை நாம் ஏன் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்று ஒதுங்கிக் கொள்ளும் வகையிலேயே நடந்து வருகின்றன. இப்படி அமைப்பு ரீதியாக ஒட்டுமொத்தமாக சீர்கெட்டு நோய் முற்றிப்போய் உள்ள உயர்கல்விக்கு உடனடி தேவை அறுவை சிகிச்சையே.”

இவ்வாறு 30 ஆண்டுகளுக்கு முன் கடமையாகவும், சேவையாகவும் கருதப்பட்டு கல்வி அரசாங்கத்திடம் இருந்த நிலை தற்போது பெரும் வணிகமாக மாறியுள்ளதாக பெரும் ஆதங்கத்துடன் தனது கருத்தை திரு. பாண்டியன் பகிர்ந்து கொண்டார்.

.கண்ணன்.

No comments:

Post a Comment